search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் போராட்டம்"

    விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த பட்டி கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக ஆழ்துளை மோட்டாருடன் கூடிய 4 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள், 7 மினிகுடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் கடந்த சில நாட்களாக பட்டி சுரங்கப்பாதை அருகில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மினிகுடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகித்து பல நாட்களாகிவிட்டது. இதனால் அந்த மினிகுடிநீர் தொட்டியின் முன்பு பொதுமக்கள் காலிகுடங்களை வைத்து தண்ணீர் எப்பொழுது வரும் என காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. மேலும் குடிநீர் கிடைக்காத மக்கள் அருகில் உள்ள தொட்டிக்குப்பம் மற்றும் பரூர் கிராமங்களுக்கு சென்றும், விவசாய விளைநிலங்களுக்கு சென்றும் குடிநீர் எடுத்துவந்து பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பட்டி கிராம பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தின் முன்பு திரண்டனர். குடிநீர் வழங்கக்காரி போராட்டதில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வினியோகிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினர்.

    தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் விருத்தாசலம்-சிறுவம்பார் சாலையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஊராட்சி செயலாளர் தங்கத்துரை கூறும்போது மின்சாரம் சரியாக இல்லாததால் முறையான குடிநீர் வழங்கமுடியவில்லை. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் கூறி முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.

    ×